திண்டுக்கல் ரெயில் நிலைய சுரங்கப்பாதையில் மழைநீர்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.;
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. அதில் சுமார் 50 ரெயில்கள் தினசரி ரெயில்கள் ஆகும். இதன்மூலம் பயணிகள், அவர்களின் உறவினர்கள் என தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர். இதனால் தென்னக ரெயில்வேயில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக திண்டுக்கல் திகழ்கிறது.
மேலும் ரெயில்கள் நின்று செல்வதற்கு வசதியாக 5 நடைமேடைகள் இருக்கின்றன. இந்த 5 நடைமேடைகளை இணைத்து நடைமேடைபாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் படிக்கட்டுகளில் ஏற முடியாத முதியவர்களின் வசதிக்காக 3 லிப்டுகள் இருக்கின்றன. இதுதவிர டிக்கெட்டு எடுக்கும் இடத்தில் இருந்து 2 மற்றும் 3-வது நடைமேடைகளுக்கு செல்வதற்கு சுரங்கப்பாதையும் உள்ளன.
சுரங்கப்பாதையில் மழைநீர்
இந்த சுரங்கப்பாதை வழியாக பெரும்பாலான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கசிவு ஏற்பட்டு சுரங்கப்பாதைக்குள் மழைநீர் பெருகிவிடும். அதை ஊழியர்கள் மோட்டார் வைத்து வெளியேற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. அப்போது ஏற்பட்ட கசிவால் சுரங்கப்பாதையில் குளம் போல் மழைநீர் பெருகிவிட்டது.
அதில் சுமார் 1 அடி ஆழத்துக்கு மழைநீர் தேங்கி இருக்கிறது. இதனால் சுரங்கப்பாதை வழியாக பயணிகள் செல்ல முடியாமல், படிக்கட்டுகள் வழியாக நடைமேடை பாலம் மூலம் பிற நடைமேடைகளுக்கு செல்கின்றனர். மேலும் சிலர் ஆபத்தான முறையில் தண்டவாளங்கள் வழியாக நடந்து செல்கின்றனர். எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதோடு, இனிமேல் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
டிஜிட்டல் பலகைகள்
மேலும் நடைமேடைகளில் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை குறிக்கும் டிஜிட்டல் பலகைகள் இல்லை. அதற்கு பதிலாக பெட்டிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரெயில் பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் குடும்பத்தோடு வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே டிஜிட்டல் பலகைகளை பொருத்த வேண்டும். குடிநீர், இருக்கை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.