நீண்ட நாட்களாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் நீண்ட நாட்களாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுகிறாா்கள்.

Update: 2022-06-17 17:41 GMT

திருவாரூர்;

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் நீண்ட நாட்களாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுகிறாா்கள்.

குறுகலான சாலைகள்

திருவாரூர், மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும் நகரில் தேரோடும் 4 வீதிகளை தவிர அனைத்து சாலைகளும் மிக குறுகலாக உள்ளன. இதில் காய்கறி, மளிகை, துணிக்கடை, நகை கடை போன்ற பெரும்பாலான கடைகள் அனைத்தும் கடைவீதியில் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாகஉள்ள கடைவீதி எந்த நேரத்திலும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது.இதில் ஒரு சில கடைகள் தங்களதுஎல்லையை தாண்டி விரிவுப்படுத்துதல், நடைபாதை கடைகள் போன்ற பல்வேறு காரணங்களால் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. கடைவீதியின் உள்ளே எந்த நேரமும் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

மழைநீர் வடிகால் பணி

கடைவீதி செல்லும் பிரதான வழியில் தான் பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலைய பகுதியில் மழைநீர் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வடிகால் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் பாதை அடைக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதால் மிக குறுகிய பாதையில் மக்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.இந்தநிலையில் கடைவீதி செல்லும் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு குழி தோண்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி பகலில் நடைபெறுவதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து வருகிறது.

போக்குவரத்து போலீசார்

மேலும் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் இல்லாததால் மக்கள் செய்வது அறியாமல் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.எனவே மழைநீர் வடிகால் பணிகளை போக்குவரத்து இல்லாத இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும். மேலும் நீண்ட நாட்களாக நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.போக்குவரத்தை சீரமைக்க போலீசாரை நியமிக்க வேண்டும். குறிப்பாக கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாகனம் நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்