அரியலூர் நகர் மற்றும் தவுத்தாய்குளம், வாரணவாசி, தாமரைக்குளம், கீழப்பழுவூர், திருமானூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மாண்டஸ் புயல் காரணமாக அரியலூரில் மழை பெய்யாமல் பொது மக்களை ஏமாற்றி வந்த நிலையில், நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாக்கடை நீர் சாலையில் ஓடியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பின்னர் இரவு 8 மணி அளவில் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டது. இந்த மழை பருத்தி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரியலூர் நகரில் மட்டும் 45.8 மில்லி மீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.