தொடர் மழையால் வேதாரண்யத்தில், நேரடி நெல் விதைப்பு பணிகள் பாதிப்பு
தொடர் மழையால் வேதாரண்யத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழையால் வேதாரண்யத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழை
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து இரவு, பகலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தற்போது மானாவாரி பகுதியில் நேரடி நெல் விதைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 23-ந் தேதி, 24-ந் தேதி ஆகிய 2 நாட்கள் 17 செ.மீ. மழை பெய்தது. நேற்று காலை முதல் தொடர்ந்து பல மணி நேரம் மழை பெய்தது.
நிரம்பும் குளங்கள்
இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மானாவாரி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்ய முடியாமலும், நேரடி நெல் விதைப்பு செய்ய முடியாமலும் தவித்து வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.
அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
மழையில் நனைந்த மாணவர்கள்
மழையால் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதை அறியாத வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தனர். விடுமுறை என தெரிந்ததும் அவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். மழையால் கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.