அந்தியூர்
ஈரோடு மாவட்டம் முழுவதுமே கடந்த சில நாட்களாக வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மதியம் 12 மணிக்குமேல் வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
இந்தநிலையில் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அதன்பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை தூற தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அப்போது திடீரென்று ஆலங்கட்டி மழையாக பெய்ந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஐஸ் கட்டிகளை சிறிய பாத்திரங்களில் பிடித்தனர். மேலும் ஒரு சிலர் தங்கள் கைகளிலும் பிடித்து மகிழ்ந்தனர். இதேபோல் வெள்ளாளபாளையம் பகுதியிலும் ஆலங்கட்டி மழை பெய்தது.
அந்தியூர், பர்கூர் மலைப்பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.