திண்டுக்கல்-கரூர் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணியில் சுணக்கம்
திண்டுக்கல்-கரூர் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கப்பாதைக்கு விடிவுகாலம் எப்போது என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
ரெயில்வே கேட்டுகள்
திண்டுக்கல்லில் இருந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து உள்ளது. இதற்கு வசதியாக தனித்தனி மார்க்கமாக சாலைகள் இருக்கின்றன. அதன்படி திண்டுக்கல்-காரைக்குடி, திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-பழனி, திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-சேலம், திண்டுக்கல்-கரூர், திண்டுக்கல்-திருச்சி ஆகிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இதில் திண்டுக்கல்-சேலம், திண்டுக்கல்-திருச்சி, திண்டுக்கல்-கரூர் ஆகிய சாலைகளில் நகருக்கு உள்ளேயே குறுக்காக ரெயில் பாதைகள் செல்கின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 3 சாலைகளிலும் ரெயில்வே கேட் மூடப்பட்ட போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்-திருச்சி, திண்டுக்கல்-சேலம் சாலைகளில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டன.
சுரங்கப்பாதை
மேலும் திண்டுக்கல்-திருச்சி சாலையும், திண்டுக்கல்-கரூர் சாலையும் நேருஜிநகரில் பிரிந்து செல்கின்றன. அந்த 2 சாலைகளிலும் மிக அருகே ரெயில்வே கேட்டுகள் இருந்தன. இதனால் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலமும், கரூர் சாலையில் சுரங்கப்பாதையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.
அதையடுத்து கரூர் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அந்த ரெயில்வே சுரங்கப்பாதை ரூ.17 கோடி செலவில் கட்டப்படுகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் 4 ஆண்டுகளாகியும் இதுவரை சுரங்கப்பாதை கட்டி முடிக்கவில்லை.
குளமாக மாறும் அவலம்
தற்போது தண்டவாளத்தின் இருபக்கங்களிலும் சிமெண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு சுரங்கப்பாதை பணிகள் நிறைவு பெற்று விட்டன. ஆனால் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நிறைவுபெறவில்லை. மேலும் சுரங்கப்பாதை தரைமட்டத்தில் இருந்து சுமார் 20 அடி ஆழத்துக்கு அமைக்கப்படுகிறது. இதனால் சாரல் மழை பெய்தால் கூட சுரங்கப்பாதைக்கு தோண்டிய பள்ளத்தில் மழைநீர் தேங்கி விடுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது குளம் போல் தண்ணீர் தேங்கியது. சிறிது தூரத்தில் உள்ள குட்டையில் இருந்த மீன்கள் மழைநீருடன் சேர்ந்து வந்து விட்டது. அதனால் சுரங்கப்பாதை பள்ளத்தில் பலர் மீன்பிடித்து மகிழ்ந்தனர். இதுபோன்ற காட்சிகள் ஒவ்வொரு மழையின் போதும் நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பஸ் போக்குவரத்து
மேலும் கரூர் சாலையில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் கடந்த 4 ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து தடைப்பட்டு விட்டது. எம்.வி.எம்.நகர், கூட்டுறவுநகர், பெஸ்கி கல்லூரி, ஆயில்மில் பகுதிகளை சேர்ந்த மக்கள் பஸ்சுக்காக 3 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. கரூர் சாலையில் கலை கல்லூரி, பொறியியல், பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளுக்குசெல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் எம்.வி.எம்.நகர், கூட்டுறவுநகர் பகுதி மக்கள் என்.ஜி.ஓ. காலனி வழியாக திருச்சி சாலைக்கு வந்து பிற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. அதேபோல் கரூர் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லாதால் ஓட்டல், டீக்கடை, மளிகை உள்பட பல்வேறு வகையான கடைகளில் வியாபாரம் இல்லாமல் மூடியே கிடக்கின்றன.
விடிவுகாலம் எப்போது?
இதனால் அந்த பகுதிகள் தீவாக மாறியது போன்று தோற்றம் அளிப்பதாக மக்கள் வேதனையில் தவிக்கின்றனர். இதற்கிடையே விரைவில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. அதற்குள் சுரங்கப்பாதையை கட்டும் பணியை முடிக்காவிட்டால், மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் சுரங்கப்பாதை பணிகள் நிறைவுபெற்று எப்போது விடிவுகாலம் பிறக்குமோ? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.