ஜோலார்பேட்டை: ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய பீகார் மாநில வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-25 12:48 GMT

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்து நின்று செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் நேற்று நள்ளிரவு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அதிகாலை 1 வது பிளாட்பாரத்தில் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்த பையை சோதனை செய்யும் போது கள்ளத்தனமாக பையில் 5 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரிய வந்தது.

மேலும் கஞ்சா கடத்திய வாலிபர் ஒரிஷா மாநிலம் பாரிபாலி ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் வரை பயணம் செய்து வந்ததும் தெரியவந்தது.

ரெயில்வே போலீசார் இவரை ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பீகார் மாநிலம், நர்ஹர்பூர் பகுதியை சேர்ந்த ஹிமத் சிங் என்பவரின் மகன் அமீத் குமார் (வயது 29) என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து ரெயில்வே போலீசார் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். இதனை அடுத்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி பீகார் மாநில வாலிபரை சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவின் மதிப்பு 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்