'குரூப்-டி' தேர்வுக்கு விடைத்தாள் தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் - ரெயில்வே தேர்வு வாரியம் எச்சரிக்கை

குரூப்-டி கணினி சார்ந்த தேர்வுக்கு விடைத்தாள் தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் என்று ரெயில்வே தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-09-21 01:03 GMT

சென்னை:

ரெயில்வே தேர்வு வாரியம், லெவல்-1 (குரூப்-டி) கணினி சார்ந்த தேர்வு நடத்துவதற்கு மிகவும் நன்மதிப்பு பெற்ற நிறுவனத்தை ஈடுபடுத்தி உள்ளது. இந்த தேர்வில் 1.1 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

12 மண்டல ரெயில்வேக்களில், 3 கட்ட கணினி சார்ந்த தேர்வுகள் முடிந்துவிட்டது. 4-ம் கட்ட தேர்வு கடந்த 19-ந் தேதி தொடங்கி உள்ளது. இந்த தேர்வில் எந்த வகையிலும் முறைகேடு செய்யாத வகையில், பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு உள்ளன.

தேர்வர்களுக்கு கம்ப்யூட்டர் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு மையங்களில் பதிவு செய்த பின்னர், இருக்கைகள் ரேண்டம் முறையில் ஒதுக்கப்படும். ஒரு தேர்வருக்கு ஒதுக்கப்படும் கேள்விகளை பிற தேர்வர்கள் பயன்படுத்த முடியாது.

தேர்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு தேர்வருக்கும் தனித்துவமான கேள்விகள் வழங்கப்படும் எனவே இந்த தேர்வில், யாரேனும் விடைத்தாள் தருவதாக கூறினால் அதை நம்பவேண்டாம். ஏனென்றால் அது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துவது ஆகும்.

தேர்வு எழுதுபவர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமரா மூலமாக பதிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர தேர்வு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ரெயில்வேக்கள் தங்களது ஊழியர்களை நிறுத்தியிருப்பதோடு, தேர்வு நடத்தும் நிறுவனமும் பணியாளர்கள் மூலமாக கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்கின்றன.

எனவே சட்டவிரோதமாக வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, தவறாக வழிநடத்தும் மோசடி பேர்வழிகளிடம் தேர்வு எழுதுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் மோசடி நபர்களின் பொய்யான வாக்குறுதியில் கவனம் செலுத்த வேண்டாம்.

இதுதொடர்பாக ஏற்கனவே ரெயில்வே தேர்வு வாரியம் கடந்த மாதம் 29-ந் தேதி தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்