14 இடங்களில் ரெயில் மறியல், முற்றுகை போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் 14 இடங்களில் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 763 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 20:13 GMT

விலைவாசி உயர்வை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் 14 இடங்களில் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 763 பேர் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோதக் கொள்கைகளை கடைபிடிக்கும், மத்திய அரசைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று இந்த போராட்டம் நடைபெற்றது. தஞ்சை ஒன்றியம், மாநகரம் சார்பில், தஞ்சை ரெயிலடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், கட்சியினர் ரெயில் நிலையத்திற்குள் சென்று தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் மறியல்

போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாநகரச் செயலாளர் வடிவேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குருசாமி, ச ரவணன், மாலதி, வசந்தி, நகரக் குழு உறுப்பினர்கள் கரிகாலன், ராஜன், ராஜன் கோஸ்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையை அடுத்த ஆலக்குடி ரெயில் நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் அபிமன்னன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், சங்கிலி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

763 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும், 10 இடங்களில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 141 பெண்கள் உள்பட 316 பேரும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 130 பெண்கள் உள்பட 447 பேரும் என மொத்தம் 271 பெண்கள் உள்பட 763 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்