பாதுகாப்பற்ற நிலையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்

மடத்துக்குளம் நால்ரோட்டில் பாதுகாப்பற்ற நிலையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளைப் பாதுகாக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-24 17:43 GMT

நால்ரோடு

மடத்துக்குளத்தில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையுடன் குமரலிங்கம்-கணியூர் சாலை சந்திக்கும் பகுதி நால்ரோடு என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, வழிபாட்டுத்தலம் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து நிறைந்த இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடப்பது மிகவும் சிரமமானதாக உள்ளது.

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களில் சிக்காமல் சாலையைக் கடக்க மாணவ-மாணவிகள் தவிக்கும் நிலை உள்ளது.

சாலை தடுப்புகள்

அத்துடன் இந்த பகுதியில் அடிக்கடி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. எனவே இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த பகுதியில் ஆங்காங்கே இரும்பாலான சேதமடைந்த சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவை அடிக்கடி வாகன ஓட்டிகளை பதம் பார்த்து காயங்களை உண்டாக்கி வருகிறது.

விபத்தைத் தடுப்பதற்காக வைக்கப்படும் தடுப்புகளாலேயே விபத்துக்கள் உருவாகும் சூழல் உள்ளது. எனவே நால்ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்கவும், விபத்தில்லாத சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்