ராகு பெயர்ச்சி விழா
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு ராகு பகவான் நாககன்னி நாகவல்லி என இரு தேவியருடன் மங்கள ராகுவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கு தினந்தோறும் ராகு கால நேரத்தில் நடைபெறும் பாலபிஷேகத்தின் போது ராகு பகவான் மேனியில் பால் நீல நிறமாக மாறும் அதிசயம் இன்றளவும் நடக்கிறது. ராகு பகவான் வருகிற 8-ந்தேதி மாலை 3.40 மணிக்கு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது கோவிலில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள், லட்சார்ச்சனை, சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரம், தயிர் பள்ளம் என ராகு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நேற்று காலை ராகு பகவான் சன்னதியில் லட்சார்ச்சனை தொடங்கியது. வெள்ளிக் கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட ராகு பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிங்கை சிவா, உதவி ஆணையர் உமாதேவி மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.