பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் - அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-12-21 11:53 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுயநல நோக்கத்துடன் செயல்படும் திறனற்ற தி.மு.க. அரசு தனது ஆட்சி காலம் முடிவடைவதற்கு முன்பு தமிழகத்தின் ஒட்டு மொத்த வளத்தையும் சூறையாடிவிட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதா என்ன?

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு குவாரிகள் இயங்க மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்துள்ளதை தமிழக அரசு கடந்த 14-ந் தேதி வெளியிட்டுள்ள அரசாணை மீறுவதாக உள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள சற்று பின் நோக்கி செல்ல வேண்டும்.

கடந்த 2002 ஜனவரி மாதம், தேசிய பூங்கா மற்றும் சரணாலயங்களை சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட வனமண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை வெளியிட்டது. 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் பாதுகாக்கப்பட்ட வனமண்டலங்களை உருவாக்க புது விதிமுறைகளை வெளியிட்டது.

கடந்த ஜூன்மாதம் சுப்ரீம் கோர்ட்டு, 2011-ம் ஆண்டு வழங்கப்பட்ட விதிமுறைகளின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை பாதுகாக்கப்பட்ட வனமண்டல விதிமுறைகளை அனைத்து மாநில அரசும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பை வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி தமிழக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை வெளியிட்ட அரசாணையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு வெளியே 1 கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயக்க மறுக்கப்பட்ட அனுமதியை வாபஸ் வாங்கி, தற்போது மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது திறனற்ற தி.மு.க. அரசு. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் குவாரிகளிடம் இருந்து வசூல் வேட்டையை தொடங்க உருவாக்கப்பட்ட வழிமுறை தான் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை.

தடை விதித்த பின் அனைத்து குவாரி முதலாளிகளிடமும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது திறனற்ற தி.மு.க. தற்போது வசூல் முடிந்தவுடன் தாங்கள் பிறப்பித்த தடையை நீக்கி குவாரிகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமான திறனற்ற தி.மு.க.

இந்த நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கும் அரசாணையை ரத்து செய்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும். என்பது தமிழக பா.ஜ.க.வின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்