திருமுல்லைவாயல் பகுதியில் புழல் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி
திருமுல்லைவாயல் பகுதியில் புழல் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார்.
ஏரியை தூய்மைப்படுத்தும் பணி
திருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகர் பகுதியில் அமைந்துள்ள புழல் ஏரியின் மேற்பரப்பில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை நேற்று அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார். பின்னர் ஏரியில் படர்ந்து இருக்கும் ஆகாயத்தாமரைகளை பைபர் படகு மூலம் அகற்றும் பணிகளை அவர் பார்வையிட்டார்.
அப்போது நிருபர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது:-
பொதுமக்கள் ஒத்துழைப்பு
புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு குப்பைகளை அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஏரிகள் நிறைந்த மாவட்டம் நம் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமாகும். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. கணக்கெடுப்பின்படி இங்குள்ள 22 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பது வருத்தத்துக்குரியது. இதனை குடியிருப்பு வாசிகளாகிய நீங்களே தடுக்கவில்லை என்றால் மாநகராட்சி சார்பில் நாளைக்கே உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே ஏரியில் கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ், துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், புழல் ஏரி பாதுகாப்பு இயக்க தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.