புரட்டாசி மாத எதிரொலி- 30 சதவீத கறிக்கோழிகள் தேக்கம்
புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி பண்ணைகளில் கறிக்கோழிகள் 30 சதவீதத்திற்கும் மேல் தேக்கம் அடைந்துள்ளதால் மேலும் விலை சரிய வாய்ப்பு உள்ளது.;
சேலம்,
நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்பநிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலைநிர்ணயம் செய்யப்படுகிறது. இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் பண்ணைகளில் கறிக்கோழிகள் 30 சதவீதத்திற்கும் மேல் தேக்கம் அடைந்துள்ளதால் மேலும் விலை சரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி 15 நாட்க ளுக்கு முன்பு பண்ணை கொள்முதல் விலை 130 ரூபாயாக இருந்த நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோவுக்கு 26 ரூபாய் குறைந்து 104 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது மேலும் குறைந்து பண்ணை கொள்முதல் மொத்த விலை (உயிருடன்) 86 ஆக குறைந்துள்ளது.
கடந்த வாரம் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.190-க்கும், உரித்த கறிக்கோழி ரூ.210-க்கும் விற்கப்பட்டது. தற்போது விலை குறைந்து உயிருடன் ஒரு கிலோ 120-க்கும், உரித்த கறிக்கோழி ரூ.180-க்கும் விற்கப்படுகிறது. விலை குறைந்தாலும் விற்பனை அதிகரிக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு 4.50-க்கு விற்ற ஒரு முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் 4.30-க்கு விற்பனையானது. தற்போதும் முட்டை விலை அதே அளவில் நீடிக்கிறது. முட்டைகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதன் விலை மேலும் குறையவில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.