சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவர்

சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவரை மீட்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-12-26 19:44 GMT

மருத்துவ படிப்பு

சீனாவில் புதிய வகை கொரோனா (பி.எப்.7) வேகமாக பரவி வருகிற நிலையில் அங்கு புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உயிருக்காக போராடி வருகிறார். அவரை மீட்டு தருமாறு பெற்றோர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சாதலி. இவர் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சைனம்பூராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சேக்அப்துல்லா (வயது 22). இவர் சீனாவில் ஜியான்ஹனா மாவட்டத்தில் கியூஹார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பை 5 ஆண்டு படித்து முடித்துள்ளார்.

மீட்க நடவடிக்கை

இதற்கிடையே சொந்த ஊருக்கு வந்த அவர், தற்போது மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11-ந் தேதி மீண்டும் சீனா புறப்பட்டு சென்றார். அங்கு கொரோனா பரிசோதனை முடிந்து தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இந்நிலையில் அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து புதுக்கோட்டையில் உள்ள அவரது பெற்றோருக்கு கடந்த 24-ந் தேதி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் சீனாவில் தனது மகன் உயிருக்கு போராடி வருவதால், அவருக்கு உயர்தர சிகிச்சை அளித்து, நல்ல உடல் நிலையில் மீட்டு தரும்படியும், இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டுகோள் விடுத்து சையது அபுல்ஹாசன் சாதலி மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் கண்ணீர் மல்க மனு அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

கொரோனா பாதிப்பு இல்லை

மேலும் சையதுஅபுல்ஹாசன் சாதலி கூறுகையில், 'எங்களது மகன் சீனாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பு படித்தார். இடையில் கொரோனா கால கட்டத்தில் சொந்த ஊருக்கு வந்து பின்பு ஆன்லைனில் படித்தார். படிப்பு முடிந்த நிலையில் மருத்துவ பயிற்சி மேற்கொள்வதற்காகவும், சான்றிதழ் பெறுவதற்காகவும் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு விடுத்தனர். அதனால்தான் அவர் சீனா புறப்பட்டு சென்றார். அவருடன் புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர் மற்றும் திருச்சி, சென்னையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 6 பேர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சீனா புறப்பட்டு சென்றனர். மற்றவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

எங்களது மகனுக்கு மட்டும் உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்தனர். ஆனால் புதிய வகை கொரோனா பாதிப்பு என்று தெரிவிக்கவில்லை. அதனால் எங்களது மகனுக்கு என்னவென்று தெரியவில்லை. அவரிடம் நாங்கள் செல்போனில் பேசவில்லை. மயக்க நிலையில் சிகிச்சையில் இருப்பதாக மட்டும் தகவல் தெரிவித்தனர். அவரை நல்ல முறையில் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்