வேளாண் பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் புதுக்கோட்டை விவசாயிகள்
வேளாண் பட்ஜெட்டில் புதுக்கோட்டை விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதியில் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்குகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை
தமிழக வேளாண் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், தூத்துக்குடி, பண்ருட்டி, பெரம்பலூர், திண்டுக்கல், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பலா, வாழை, கரும்பு, முருங்கை, மல்லிகை உள்ளிட்ட விவசாய பொருட்கள் இடம்பெற்றதோடு அவற்றை மேம்படுத்த வேண்டி நிதி நிலை அறிக்கையில் வாசிக்கப்பட்டது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை குறிப்பிட்டு எந்தவொரு நிதி நிலை அறிக்கையும் குறிப்பிடாதது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி மற்றும் வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் பலா, வாழை, தென்னை மற்றும் மலர் சாகுபடி பணிகள் ஆண்டு முழுவதும் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்பகுதிகளில் இதுவரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் எந்தவொரு நலத்திட்டங்களும் முறையாக இல்லை எனவும், தேர்தல் சமயங்களில் நறுமண தொழிற்சாலை மற்றும் குளிர்பதன கிடங்குகள் போன்றவை அமைத்து தரப்படும் என அரசியல் கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நடைமுறை படுத்தப்படவில்லை எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள்.
தைல மரங்கள்
இதேபோல் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம், பலாப்பழ மதிப்பு கூட்டும் தொழிற்சாலை, வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலகம் போன்றவை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கூறி வந்த நிலையில், வேளாண் பட்ஜெட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை குறிப்பிட்டு எந்தவொரு நிதி நிலை அறிக்கையும் குறிப்பிடாதது ஏமாற்ற அளிப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் லட்சக்கணக்கான ஏக்கர் தைல மரங்கள் அரசு மற்றும் தனியார் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் குறைவு மற்றும் மழைப்பொழிவு ஆண்டுக்காண்டு குறைந்து வருவதாகவும், இதன் மூலமாக, விவசாயிகள் வளர்ச்சி காண முடியாத சூழ்நிலை மற்றும் வனக்காடுகள் அனைத்துமே தைல மரங்களாகவே இருப்பதால் வன உயிரினங்கள் வாழ்விடம் மற்றும் உணவு தேடி விவசாய விளை நிலங்களில் தஞ்சம் புகுந்தும், வேட்டை நாய் மற்றும் வாகன விபத்துகளில் சிக்கி இறந்து வருகின்றன.
குளிர்பதன கிடங்குகள்
இவ்வளவு பிரச்சினைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் இதுகுறித்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் எந்தவொரு நடவடிக்கையோ வேளாண் அறிவிப்புகளோ இல்லாதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்குகள் அமைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.