புதுக்கோட்டை தேர் விபத்து: அதிகாரிகளை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் தர்ணா

புதுக்கோட்டையில் தேர் விபத்து தொடர்பாக அதிகாரிகளை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-06 19:02 GMT

தேர் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கடந்த 31-ந் தேதி நடைபெற்ற போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தேரோட்டத்தின் போது சக்கரத்தின் அடியில் கட்டை போடும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் 2 பேர் மீது திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

8 பேர் கைது

இந்த நிலையில் தேர் கவிழ்ந்த விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், கோவில் மேற்பார்வையாளர், பொதுப்பணித்துறை அதிகாரி ஆகியோர் தான் காரணம். தேரை வெள்ளோட்டம் பார்க்காமல் இயக்கியது, தேரோட்டத்திற்கான நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை. அதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதாவின் அரசு தொடர்பு அணி மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று மாலை தேர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுத்ததால் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்