கலங்கலாக வரும் குடிநீரால் பொதுமக்கள் அவதி

கலங்கலாக வரும் குடிநீரால் பொதுமக்கள் அவதி

Update: 2023-03-19 19:48 GMT

தஞ்சை பழைய மாரியம்மன் கோவில் சாலையில் உள்ள பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சை மாநகராட்சி

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் தஞ்சை பள்ளியக்கிரஹாரத்தில் உள்ள நீரேற்ற நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து மாநகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதுதவிர மாநகராட்சி பகுதியில் ஆழ்துளைகிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்தும் குடிநீர் எடுத்து வழங்கப்பட்டு வருகிறது.

கலங்கலாக குடிநீர்

இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் பழைய மாரியம்மன் கோவில் சாலையில் உள்ள 12-வது வார்ட்டு ஜெபமாலை மாதா கோவில் தெரு பகுதிக்கு வரும் குடிநீர் கலங்கலாக வருகிறது.இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குடிநீர் கலங்கலாக வருவதால் குடிப்பதற்கு அசுத்தமாக இருப்பதாகவும், அதனை பருகினால் நோய் பரவும் என அச்சத்துடன் பொதுமக்கள் காணப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களாக குடிநீர் இதே போன்று தான் வருகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்