தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
குடிநீர் வினியோகம் செய்ய கோரி ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
குடிநீர் வினியோகம் செய்ய கோரி ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி-குன்னூா் சாலையில் மந்தாடா ராஜ்குமார் நகர் உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையே அப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீா் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வீட்டு தேவைக்கு குடிநீர் இன்றி கடும் அவதிப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து குடிநீா் வினியோகம் செய்ய கோரி சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தில் புகாா் தெரிவித்தனர். இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரத்தில் பெய்த மழையின் போது, மழைநீரை பிடித்து வைத்து குடிநீராக பயன்படுத்தி வந்தனா்.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று குடிநீர் வினியோகம் செய்ய கோரியும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் மந்தாடா ராஜ்குமார் நகர் பொதுமக்கள் ஊட்டி-குன்னூா் சாலையில் நேற்று முன்தினம் திடீரென மறியலில் ஈடுபட்டனா். அவர்கள் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து, முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கேத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பிரச்சினைக்கு தீர்வு
அப்போது 2 நாட்களுக்குள் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் உடனடியாக அப்பகுதிக்கு லாரி மூலம் குடிநீா் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தனா். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இருப்பினும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.