நடைபாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்...!
சித்தர் கோவில் அருகே நடைபாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
இரும்பாலை
சேலம் சித்தர் கோவில் மெயின்ரோட்டில் செம்மண் திட்டு பஸ் நிறுத்தம் அருகே பாறைக்காடு வலியன் காடு என்ற இடத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை பட்டா நிலம் எனவும், எனவே அந்தப்பாதையை பயன்படுத்தக்கூடாது என சம்பந்தப்பட்ட தனிநபர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று சித்தர் கோவில் மெயின் ரோடு செம்மண் திட்டு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல் குமார் மற்றும் போலீசார், திருமலைகிரி கிராம நிர்வாக அலுவலர் சொர்ணலதா ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சித்தர் கோவில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.