குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கும்பகோணம் அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் அமைந்துள்ளது. இந்த பகுதியின் அருகே கிராம சமுதாயக்குளம் உள்ளது. இந்த குளத்தை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டு, தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.
இதை அறிந்த கீழக்கொட்டையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு குளத்தை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு தான் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், தூர்வாரும் பணியை நிறுத்தக்கோரியும் கும்பகோணம் சுவாமிமலை மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மண்டல தலைவர் ஆசைத்தம்பி, கவுன்சிலர் ராஜேஸ்வரி, மாநகராட்சி உதவி பொறியாளர் மாதவராஜ் ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒருவார காலத்தில் கிராம சமுதாய குளத்தை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம் -சுவாமிமலை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.