வாணியம்பாடி அருகே பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பரபரப்பு...!

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரியில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-27 09:02 GMT


திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே மதனாஞ்சேரியில் உள்ள பெருமாள் கோவில் வட்டம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் பல ஏக்கர் உள்ளது. இந்த பகுதியில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நபர்களுக்கும், தும்பேரி பகுதியை சேர்ந்த ஆக்கிரமிப்பு நபர்களுக்கும் இடம் ஒதுக்கி ஈடுசெய்ய வருவாய்த்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.

இதனை அறிந்த கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு இப்பகுதியில் இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர், கால்நடை மற்றும் இதர வகை பயன்பாட்டிற்கு போதிய இடம் இல்லாததால் வெளியூர்களுக்கு இந்த இடம் ஒதுக்க கூடாது எனக்கூறி மதனாஞ்சேரி கிராம மக்கள், வாணியம்பாடி கூட்டு ரோட்டில் திடீரென அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி தாசில்தார் சம்பத், போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்