மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்
மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி உத்தமர்சீலி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ள வந்த லாரியை பனையபுரம், திருப்பால்துறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாலை முதல் நள்ளிரவு வரை மணல் குவாரி இயங்கி வருகிறது. அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மணல் குவாரி செயல்பட கூடாது. மணல் குவாரிக்கு செல்லும் லாரிகள் ஒரே வழியில் சென்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. லாரிகள் செல்லவோ அல்லது திரும்பி வரவோ மட்டுமே ஒரு வழியை பயன்படுத்த வேண்டும். மேலும் மணல் குவாரியில் போலி அனுமதி சீட்டு வழங்குவதை தடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.