மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்

மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-01-05 21:18 GMT

கொள்ளிடம் டோல்கேட்:

ஐகோர்ட்டில் வழக்கு

லால்குடியை சேர்ந்த கொள்ளிடம் ஆற்று பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர் சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கல்லணைக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் மணல் எடுக்க இடைக்கால தடை விதிப்பதோடு, அப்பகுதியில் குவாரி நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்றிலுமாக தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் ஜனவரி 11-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

லாரிகளை மறித்து போராட்டம்

இந்நிலையில் நேற்று கல்லணை அருகே கவுத்தரசநல்லூர் மற்றும் கிளிக்கூடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி நோக்கி வந்த மணல் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, வருகிற 11-ந் தேதி வரை அரசு மணல் குவாரிகள் இயங்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கோவிலடி அருகே கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியில் லாரிகள் மணல் ஏற்றி வருகின்றன. கோர்ட்டு உத்தரவின்படி மணல் குவாரிகள் செயல்படவும், லாரிகள் மணல் ஏற்றவும் அனுமதிக்கப்படக்கூடாது என்று போலீசாரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்க...

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என்று போராட்டக்காரர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்