போலீஸ் பட்டாலியனுக்கு குடிநீர்கொண்டு செல்ல எதிர்ப்பு

போலீஸ் பட்டாலியனுக்கு குடிநீர்கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குழாயை துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-18 18:45 GMT

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையின் 12-வது பட்டாலியன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாலியனுக்கு தேவைப்படும் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. எதிர்கால தேவையையும் கருத்தில் கொண்டு நீர்ஆதார ஆய்வு மேற்கொண்டு இறுதியில் சக்கரக்கோட்டை கண்மாய் அருகில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் பட்டாலியனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்த குடிநீர் பணிக்காக சக்கரக்கோட்டை கண்மாய் கலுங்கு அருகில் சாலையின் குறுக்கே குழாய் பதித்து பட்டாலியன் வரை கொண்டு செல்ல பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் அதிக தண்ணீர் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் மேற்கண்ட பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து அப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கருதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை திடீரென்று ஏராளமான பொதுமக்கள் சக்கரக்கோட்டை சோதனை சாவடி பகுதியில் குழாய் அமைத்துள்ள இடத்தில் திரண்டு குழாய் அமைத்து தண்ணீரை கொண்டு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையின் குறுக்கே பதிக்கப்பட்ட குழாயை தோண்டி எடுத்ததாக கூறப்படுகிறது.. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இனி இப்பகுதியில் குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க முயன்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்