அம்மாபாளையத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து அம்மாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-08-03 19:10 GMT

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் 4-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8.15 மணியளவில் காலிக்குடங்களுடன் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அம்மாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களின் மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணி வகுத்து நிற்க தொடங்கின. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார், அம்மாபாளையம் கிராம ஊராட்சி நிர்வாகத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மோட்டார் பழுது...

அப்போது ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் கிணற்றில் மோட்டார் பழுது ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. மோட்டார் பழுது சாி செய்யப்பட்டு விட்டது. இனி வழக்கம் போல் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பொதுமக்களின் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்