செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கருங்கல் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-07-20 17:12 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள பாலூர் ஊராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் ஒன்று அமைக்க அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பாலூர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்காமல் திப்பிரமலை ஊராட்சி அலுவலகம் அருகில் குடியிருப்புகள் மத்தியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடந்தது.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திப்பிரமலை ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஊராட்சி உறுப்பினர் தவசுமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜோபி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் லெனின்குமார், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதில் பெண்களும் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்