கோவில் அலங்கார வளைவை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

குலசேகரம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட கோவில் அலங்கார வளைவை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-20 17:24 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட கோவில் அலங்கார வளைவை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அலங்கார வளைவு

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்டலிகோட்டில் பேரூராட்சி அலுவலகத்தையடுத்து நாகராஜா கோவில் உள்ளது. கடந்த மாதம் இந்த கோவிலுக்குச் செல்லும் பாதையில் கோவில் பெயருடன் கூடிய ஒரு அலங்கார வளைவு வைக்கப்பட்டது. இது அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதாக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவர் செயல் அலுவலர் ஜெயமாலினியிடம் புகார் செய்தார். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் அலங்கார வளைவு வைத்தவர்களிடம் அதனை அகற்றுமாறு கூறினார். ஆனால் அலங்கார வளைவு அகற்றப்படவில்லை.

இந்தநிலையில் காலையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, குலசேகரம் வருவாய் ஆய்வாளர் ரவிநாத், பொன்மனை கிராம நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் அலங்கார வளைவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அந்த பகுதியில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அலங்கார வளைவை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு ஆதரவாக பா.ஜனதாவைச் சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் அருள்மொழி மற்றும் பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் வினோத், இந்துக் கோவில்கள் கூட்டமைப்பு மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், கவுன்சிலர்கள் போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி அலங்கார வளைவு அமைக்கக்கூடாது. பட்டா நிலத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினர். இதில் முதலில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

இறுதியில் அலங்கார வளைவை அந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டின் பக்கவாட்டில் பட்டா நிலத்தில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

உள்ளிருப்புப் போராட்டம்

இதற்கிடையே பொன்மனை பேரூராட்சியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் சாலையில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டுமென்று பேரூராட்சி துணைத் தலைவர் அருள்மொழி மற்றும் கவுன்சிலர்கள் செல்லன், கிருஷ்ணகுமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி பேச்சுவார்த்தை நடத்தி கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அத்துடன் கொடிக்கம்பத்தை அகற்றும் படி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்