டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நடுக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-03-07 11:35 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் பள்ளி அருகில் பஜார் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தின் போது 5 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து உடனடியாக டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து கலெக்டர் பா.முருகேஷ் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நடுக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பது சம்பந்தமாக மேலாளர் மற்றும் கலால் அலுவலர் ஆய்வு செய்ததாக தகவல் பரவியது.

இதனையடுத்து கிராம மக்கள் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசனிடம், எங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை நிரந்தரமாக வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்