கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நொய்யல் அருகே குப்பம் கிராமத்தில் 2 தனியார் கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-12-17 18:09 GMT

கருத்து கேட்பு கூட்டம்

நொய்யல் அருகே குப்பம் கிராமத்தில் என்.டி.சி. புளூ மெட்டல் எனும் பெயரில் தனியார் கல்குவாரியை 2 இடங்களில் அமைக்க உள்ளனர். இது தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமை தாங்கினார். மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். புகழூர் வட்டாட்சியர் முருகன் வரவேற்று பேசினார்.

அனுமதி தரக்கூடாது

கூட்டத்தில், சமூக ஆர்வலர் முகிலன் பேசுகையில், க.பரமத்தி, தென்னிலை, குப்பம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒரு சில கல்குவாரிகளில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கூடுதலாக ஆழமாக கல்வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

கல்குவாரிகள் அமைக்கப்படும் இடங்களில் மின் கம்பங்கள், குடியிருப்பு வீடுகள், நீரூற்று நிலையங்கள், பல்வேறு மாநிலங்களுக்கு இங்கிருந்து அனுப்பப்படும் உயர் அழுத்த மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் கல்குவாரிகள் அமைக்கும் உரிமையாளர்கள் வரைப்படங்களில் காட்டவில்லை. எனவே குப்பம் கிராமத்தில் 2 கல் குவாரிகளுக்கும் அனுமதி தரக்கூடாது, என்றார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்தவர்கள், புதிதாக அமைய உள்ள 2 கல் குவாரிகளுக்கு அருகே வீடுகளும், ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.7½ கோடியில் குடிநீர் திட்டமும் உள்ளது. ஏற்கனவே இதே தனியார் கல்குவாரி சட்ட விரோதமாக இரவில் செயல்பட்டு வந்தது. அதனால் மிகப்பெரிய பாறை ஒன்று உருண்டு லாரி மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புதிதாக 2 கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது என கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கல்குவாரி அமைக்க சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

இதில், குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்