ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
பொன்னை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டது.
காட்பாடி தாலுகா தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் பொன்னை அருகே உள்ள தெங்கால் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. இதனை அடுத்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி பொது மக்கள் சிலர் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் தெங்கால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.