வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-21 19:57 GMT

ஜெயங்கொண்டம்:

உண்ணாவிரத போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொக்கரனை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பொன்னேரி நீர்நிலை புறம்போக்கு கரை பகுதியில் 3 தலைமுறையாக அப்பகுதி மக்கள் வசிக்கும் 67 வீடுகளை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து, வீடுகளை அகற்றக்கூடாது என்றும், மாற்று இடம் வழங்க கோரியும் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் பொதுமக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து நேற்று ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அறவழி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி நடந்த இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

மயங்கி விழுந்த மூதாட்டி

அப்போது கொளுத்தும் வெயிலில் போராட்டத்தில் கலந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பூங்கோதை என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தின்போது பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக பந்தல் அமைக்க போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால், கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக மூதாட்டி மயக்கம் அடைந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.மேலும் போராட்டத்தின்போது, பொதுமக்களின் வீடுகளை அகற்றும் போக்கை அரசு கைவிட வேண்டும். பொதுமக்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்க வேண்டும். தற்போது வழங்கிய இடம் சரியில்லாத காரணத்தால் மாற்று இடம், இடிக்கப்படும் வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மறு குடியமர்வுக்கு வீடு கட்ட அரசு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயலாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் மணிவேல், மகாராஜன் உள்ளிட்டோர் பேசினர். அப்போது நீர்நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், காவலர் குடியிருப்புகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். தற்போது மீன் மார்க்கெட்டாக இயங்கி வரும் கோடாப்பிள்ளை குட்டையை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறினர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், பா.ம.க. நிர்வாகி குமார், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடராஜன், விவசாய தொழிலாளர் சங்கம் சேகர் மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்