திட்டக்குடியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
நாய்களை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி திட்டக்குடியில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனா்.
ராமநத்தம்:
திட்டக்குடியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையிலும், தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அந்த வழியாக நடந்து செல்வோரை கடிக்கிறது. இவ்வாறாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பேட்டோரை நாய்கள் கடித்துள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை மொபட்டில் பால் விற்க வந்த வியாபாரியை நாய்கள் துரத்தி துரத்தி கடித்தன. இதில் மொபட்டுடன் அவர் தடுமாறி கீழே விழுந்தார். மொபட்டில் இருந்த 50 லிட்டர் பால் சாலையில் கொட்டியது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள், பால் வியாபாரியை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துமாறு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத திட்டக்குடி நகராட்சியை கண்டித்தும், தெருவில் சுற்றித்திரியும் நாய்களை உடனே பிடித்து அப்புறப்படுத்த கோரியும் பெரியார் நகர் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இன்னும் ஒரு சில நாட்களில் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தாக தெரிவித்தனர். இதை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.