கழிவறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
கழிவறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூரில் பழைய அரசு மருத்துவமனை வளாகம் உள்ளது. இந்த மருத்துவமனை ஒருங்கிணைந்த மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்து வந்தது. பின்னர் காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதனால் இந்த மருத்துவமனை வளாகத்தில் காசநோய், சித்தா பிரிவு, ஆயுர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவ பிரிவுகள் உள்ளிட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைக்கு பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பழைய அரசு மருத்துவமனைக்கு வெளியே கட்டப்பட்ட கழிவறைகள் பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள கழிவறைகளை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.