கால்வாயுடன் கூடிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
நாயக்கனேரியில் கால்வாயுடன் கூடிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு அருகே உள்ள நாயக்கனேரி மலை அடிவாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் செல்ல வீட்டின் முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.
மழைநீர் அதன்வழியே வடிந்து நாயக்கனேரி ஏரிக்கு செல்கிறது. இந்த நிலையில் கால்வாய்க்கு தோண்டப்பட்ட இடத்தில் கால்வாய் அமைக்கப்படவில்லை. மேலும் கால்வாயை கடந்து வீட்டுக்கு செல்லும் வகையில் பாலமும் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த சில குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளத்தை கடக்கும் வகையில் மரக்கட்டைகளால் தூண் மற்றும் பாலம் அமைத்துள்ளனர். அதன் மேற்பகுதியில் மண் மற்றும் சிமெண்டு கலவையை கொட்டி பயன்படுத்துகின்றனர். அதிகப்படியாக மழை பெய்தால் அந்த பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லும் நிலை உள்ளது. குழந்தைகளை வைத்துள்ள பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
எனவே கால்வாயுடன் கூடிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.