தனியார் பஸ்சை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பத்தூர் செல்ல தாசில்தாரை ஏற்ற மறுத்ததால் தனியார் பஸ்சை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-27 18:42 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் கண்ணதாசன். இவர் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வருவதற்காக, மதுரையில் இருந்து திருப்பத்தூர் வழியாக தேவகோட்டைக்கு செல்லும் தனியார் பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது பஸ் கண்டக்டர் திருப்பத்தூருக்கு பஸ் செல்லும்போது ஏறி கொள்ளுங்கள். இப்போது இறங்குங்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணதாசன் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விடுமாறு கூறியதை அடுத்து, அவரை பஸ்சில் ஏற்றி அழைத்து வந்துள்ளனர். இந்த தகவல் திருப்பத்தூர் பொதுமக்களுக்கும் தெரிந்த நிலையில் அண்ணா சிலை அருகே வந்த தனியார் பஸ்சை பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். மதுரையில் இருந்து திருப்பத்தூர் வழியாக தேவகோட்டை செல்லும் தனியார் பஸ்களும் தேவகோட்டை, காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் தனியார் பஸ்களும் திருப்பத்தூர் பயணிகளை ஏற்ற மறுப்பது தொடர்கதையாகி வருகிறது. சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக அண்ணா சிலை அருகே பஸ்சை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து போலீசார், தாசில்தார் கண்ணதாசன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்