திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - மழைநீர் கால்வாய் அமைத்து தர வலியுறுத்தல்

மழைநீர் கால்வாய் அமைத்து தர கோரி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-15 09:15 GMT

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு, தேவி கருமாரியம்மன் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக இந்த பகுதி முழுவதும் அதிக அளவில் மழைநீர் தேங்கி பாதிப்பு அடைந்தது. எனவே இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாட்ஷாவை சம்பவ இடத்தை பார்வையிட பொதுமக்கள் அழைத்து சென்றனர். மழைநீர் தேங்கி இருந்த ஒரு சில இடங்களை மட்டும் பார்வையிட்ட அவர், மற்ற பகுதிகளை பார்வையிட வரமறுத்ததாக தெரிகிறது.

பின்னர் அங்கிருந்து செல்ல முயன்ற நகராட்சி கமிஷனரை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது அங்கு வந்த 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளங்கோ, "20 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என ஆவேசமாக கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், "20 ஆண்டுகளாக இருந்தவர்கள் செய்யவில்லை என்பதால்தான் நீங்கள் செய்வீர்கள் என நினைத்து உங்களை கவுன்சிலராக தேர்வு செய்தோம்" என கூறி கவுன்சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களை நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று நகரமன்ற தலைவர் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த பருவ மழை காலத்துக்குள் அந்த பகுதியில் மழை நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்