நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தொண்டியாளத்தில், சாலையை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
பந்தலூர் அருகே தொண்டியாளம் பயணிகள் நிழற்குடைக்கு அருகில் வலதுபுறத்தில் பொதுமக்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் சீரமைக்கப்படாத கால்வாயும் இருக்கிறது.
இந்த நிலையில் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் பலமுறை தெரிவித்தும், நெல்லியாளம் நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை சீரமைக்கக்கோரி நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.