பட்டா மாற்றத்திற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
பட்டா மாற்றத்திற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
ஜெயங்கொண்டம்:
லஞ்சம் கேட்பதாக...
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நிலம் வாங்குபவர்கள், அதற்கான பத்திரப்பதிவு செய்யும்போது நில அளவை செய்து தனிப்பட்டா மாற்றத்திற்கான தொகையையும் சேர்த்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடத்தை அளப்பது, தனிப்பட்டா வழங்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துகின்றனர். அவ்வாறு அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தியபோதும், பொதுமக்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால், அந்த பணத்தை கேட்பதாக அலுவலர்கள், பொதுமக்களிடம் தெரிவிப்பதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து பட்டா மாற்றம் செய்துவிடலாம். ஆனால் ஏழை, எளிய மக்களால் எப்படி பணம் கொடுத்து பட்டா மாற்றம் செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் பல்வேறு இடங்களில் பல வகையில் சில அலுவலர்கள் இதுபோன்று பணம் கேட்டு பொதுமக்களை வாட்டி வதைக்கும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்று ஒரு சிலர் செய்யும் தவறால் மற்ற நேர்மையான அதிகாரிகளையும் பொதுமக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.