தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்

தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-21 19:18 GMT

தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார். அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவி சாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால் தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப்படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.

காரணங்கள்

கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன. ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன.

தற்கொலை செய்து கொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்தி கொள்வதில்லை. மாறாக, அவர்களை சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புள்ளி விவரங்கள்

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.

தமிழ்நாடு 2-வது இடம்

இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.

இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களை பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவ செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மன வலியாக இருக்கிறது.

மனநல ஆலோசனை

மாணவ சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது. இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கட்டாயம் நடத்த வேண்டும்

குன்னம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கொ.அழகு முதல்வன்:- சமீப காலமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை தடுக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாதம் இருமுறை மனநல ஆலோசனை வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். இந்த வகுப்புகளில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ள வேண்டும். இதில் ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகர்கள் கொண்ட குழுவால், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் மாவட்டம் வாரியாக ஒரு மீட்பு குழு அமைத்து, தற்கொலை சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.

பிரச்சினைகளை கேட்க வேண்டும்

உடையார்பாளையம் வடக்கு பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ்:- ஒரு ஆசிரியர் தனது மாணவனுக்கு இரண்டாவது தாய். ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு முதல் ஆசிரியர். இந்த நிலையில் மாணவர்களை அணுகினால் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். பொதுவாகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யும்போது, அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டை கவனிக்க வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவர்கள் மனம் திறந்து பேசும் வகையில் அவர்களை அணுக வேண்டும். அவர்களது பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். இது போன்றவற்றால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை பெரும்பாலும் தவிர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

நேர்மறை எண்ணங்களை புகுத்த வேண்டும்

பெரம்பலூரை சேர்ந்த டாக்டர் ஸ்வீட்லின் செர்லி:- பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை தடுப்பதற்கு அவர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள் என்பதை எச்சரிக்கை அறிவியல் மூலமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கவலையாக இருத்தல், கனவு அதிகமாக காணுதல், இறந்து விடுவது போல் கனவு காண்பது, பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றை பற்றி அவர்களிடம் கேட்டு தெரிந்து, அதற்கு தகுந்தாற்போல் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். எதற்கெல்லாம் மனச்சோர்வு அடைகிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் உற்றுநோக்க வேண்டும். ேதவைப்படும் சமயத்தில் மனநல டாக்டரை அணுகலாம். மேலும் பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்தப்படுவதும் சிறப்பாகவே இருக்கும். மாணவர்களிடத்தில் நேர்மறையான எண்ணங்களை புகுத்தினால், தற்கொலை முடிவுகளை தவிர்த்து சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வார்கள்.

வரவேற்கக்கூடியது

அரசு பள்ளி ஆசிரியர் ராமலிங்கம்:- மாணவ, மாணவிகளிள் பதின்பருவ சூழலில் மடை மாற்றுக்காக தற்போது தமிழக அரசு அறிவுறுத்தலின்படி நூலக வாசிப்பு, நீதிபோதனை வகுப்பு, விளையாட்டு போட்டிகள், கலைத்திருவிழா நடத்தப்படுகின்றன. இதனால் தற்போது மாணவ, மாணவிகள் நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இருப்பினும் சில காரணங்களால் தற்கொலை சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க பள்ளியில் மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்தினால், அது வரவேற்கக்கூடியதுதான். மேலும் வீட்டில் பெற்றோர்களின் கண்காணிப்பு, அன்பு, பாசமும் மாணவர்களுக்கு முக்கியம்.

கல்லூரி உதவி பேராசிரியர் ஸ்ரீதர்:- பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்தினால், அதன் மூலம் கிடைக்கும் அறிவுரைகளாலும், ஆலோசனைகளாலும் தற்கொலை எண்ணங்கள் மாற வாய்ப்பு ஏற்படலாம். மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டியது ஆகும். தற்கொலை சம்பவங்களை தவிர்க்க இளைய சமுதாயம் விழிப்பு கொள்ள வேண்டும். நெஞ்சில் உறுதிகொள்ள வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்