கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
வெளிப்பாளையம்:
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என நாகை கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை கோட்ட 12-வது மாநாடு
நாகை மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நாகை கோட்ட 12-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கோட்ட தலைவர் அரிதாஸ் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் விஜயராகவன், மாநில தலைமை ஆலோசகர் ஜான்பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் தணிக்கையாளர் குமரவேல் தேசிய கொடியையும், திருவாரூர் கிளை செயலாளர் தாயுமானவன் சங்க கொடியையும் ஏற்றி வைத்தனர். கோட்ட செயலாளர் இளங்கோவன் வேலை அறிக்கையையும், கோட்ட பொருளாளர் சிவராமன் வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர்.
அனைத்து கடன் வசதி
மாநாட்டில், இலாக்கா ஊழியர்களுக்கு வழங்குவது போல் 3 கட்ட பதவி உயர்வை கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக்கி இலாக்கா ஊழியராக்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கூட்டுறவு சங்க கடன் தொகை, வீடு கட்ட முன் பணம் என அனைத்து கடன் வசதியும் வழங்க வேண்டும்.
தபால்காரர் காலிப்பணியிடங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் கிராமிய அஞ்சல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.