அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-06-27 20:41 GMT

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். ஓமலூர் காமலாபுரம் அருகே சேலத்தான் காடு பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி பெண் உறவினர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டுமான அமைப்புச்சாரா மற்றும் 12 புதிய நலவாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

ஓய்வூதியம்

அந்த மனுவில், தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 60 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கிவிட்டு அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். ஆகையால் உடனடியாக ஓய்வூதியம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன. இதுதொடர்பாக விசாரணை நடத்தி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இந்த கூட்டத்தில் தாரமங்கலம் நரிகுறவர் காலனியில் வசித்து வரும் 7 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, துனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்திய பால கங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்