மீனவர்கள் காதில் பூ சுற்றி சங்கு ஊதி நூதன போராட்டம்

மீனவர்கள் குறைதீர் கூட்டம் நடத்தாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் காதில் பூ சுற்றி சங்கு ஊதி நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-26 16:44 GMT


மீனவர்கள் குறைதீர் கூட்டம் நடத்தாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் காதில் பூ சுற்றி சங்கு ஊதி நூதன போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ கடல்தொழிலாளர் சங்கம் செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் ஏராளமான மீனவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் காதுகளில் பூசுற்றி, சங்கு ஊதியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் மீனவர் நலன் சார்ந்த உத்தரவின்படி கலெக்டர் அலுவலகங்களில் மாதந்தோறும் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த கூட்டமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 2 முறையும், 2018 முதல் 2022 வரையிலான காலங்களில் 2 முறையும் என கடந்த 8 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே நடந்து உள்ளது. மீனவர்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாததால் ஏற்கனவே நடத்தப்பட்ட கூட்டங்களில் வழங்கப்பட்ட மீனவர்களின் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகமும், அரசும் எடுத்த நடவடிக்கை குறித்து உரிய விளக்கம் பெற முடியாத நிலை உள்ளது.

நடவடிக்கை

மேலும், இந்த மனுக்கள் மீது இதுவரை மீன்வளத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி மனுக்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக விசைப்படகுகளின் கரையோர மீன்பிடிப்பு, இரட்டைமடி மீன்பிடிப்பு, நம்பர் இல்லாமல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகள், போலி பதிவு புத்தகங்கள் மூலம் அரசு வழங்கும் மானிய விலை டீசலில் விசைப்படகுகள் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட தொகை இதுவரை வசூலிக்கப் ்படாமல் உள்ளது. உரிய பதிவு புத்தகம் இன்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்பட்டு ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் பயன்பாட்டில் உள்ள 20 விசைப்படகுகள் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

பரபரப்பு

இதுபோன்ற மீனவர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதோடு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப் படாமல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாதந்தோறும் மீனவர்கள்குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மீனவர் குறைதீர் கூட்டம் நடத்தக்கோரி காதுகளில் பூசுற்றி சங்கு ஊதி மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்