மாடுகளை அடித்து கொன்ற புலியை பிடிக்காவிட்டால் போராட்டம்

தேவர்சோலை அருகே மாடுகளை கொன்று வரும் புலியை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.

Update: 2023-10-03 19:30 GMT

தேவர்சோலை அருகே மாடுகளை கொன்று வரும் புலியை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.

கால்நடைகளை கொல்லும் புலி

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்-1 பகுதியில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக புலி ஒன்று கால்நடைகளை கடித்துக் கொன்று வருகிறது.

இதற்கு உரிய இழப்பீடு தொகை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர். ஆனால், புலி நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை. இதனால் தொடர்ந்து புலி கால்நடைகளை கொன்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மகாதேவன் என்பவரது பசுமாட்டை புலி கடித்து கொன்றது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

பிடிக்காவிட்டால் போராட்டம்

மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். தகவல் அறிந்த கூடலூர் எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் நேற்று கிராம மக்களை சந்தித்தார். அப்போது புலியின் நடமாட்டத்தால் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புலியை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.

இதுகுறித்து கூடலூர் வனத்துறையினர் கூறியதாவது:-

தேவன்-1 கிராமத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலி நடமாட்டம் சில வாரங்கள் கண்காணிக்கப்பட்டது. ஆனால், கேமராவில் புலி பதிவாக வில்லை. இவ்வாறு பலமுறை கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இரையை சாப்பிட்டவுடன் புலி அங்கிருந்து சென்று விடுகிறது. பின்னர் எந்த நேரத்தில் வருகிறது என தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்