நெற்பயிர்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம்-தர்மர் எம்.பி. பேட்டி

நெற்பயிர்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தர்மர் எம்.பி. கூறினார்

Update: 2023-01-04 18:45 GMT

பரமக்குடி

நெற்பயிர்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தர்மர் எம்.பி. கூறினார்.

பேட்டி

தர்மர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம். குறிப்பாக வானம் பார்த்த பூமி தான். இந்த மாவட்டத்தை பொறுத்தவரை மழை பெய்தால் விவசாயம் நன்றாக இருக்கும். மழை இல்லாவிட்டால் விவசாயம் பொய்த்துவிடும். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழையை நம்பி 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் விதைப்புக்கு பின்பு பருவ மழை சரியாக பெய்யாததால் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி, பரமக்குடி, நயினார்கோவில், போகலூர், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு நாசமாகி விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாதிப்பு

கடன் வாங்கியும், வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு இந்த இழப்பு பேரிழப்பாக உள்ளது. மேலும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முறையாக கண்மாய்களுக்கு சென்றடையவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1792 கண்மாய்களில் 200 கண்மாய்களுக்கு கூட தண்ணீர் செல்லாத நிலை தான் உள்ளது. குறிப்பாக ெரகுநாத காவேரியில் 71 கண்மாய்களும், மலட்டாறு பகுதியில் 54 கண்மாய்களும், நாராயண காவேரியில் 36 கண்மாய்களும் உள்ளது. ஆனால் இதில் ஒரு கண்மாய்க்கு கூட வைகை தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே நெல் விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.26 ஆயிரம் பயிர் இன்சூரன்ஸ் தொகையும், தமிழக அரசு சார்பில் ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழுமையாக கணக்கிட வேண்டும். பெயரளவில் மட்டும் பார்வையிட்டு கணக்கிட கூடாது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்