மணல் அள்ளிய டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டம்

கந்தனேரி பாலாற்றில் அனுமதித்த இடத்தை விட்டு வேறு இடத்தில் மணல் அள்ளியதாக பொதுமக்கள் டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-06 13:59 GMT

டிராக்டர்கள் சிறை பிடிப்பு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பாலாற்றில் கடந்த நான்கு மாதங்களாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சுமார் 500 டிராக்டர்களுக்கு மேல் மணல் எடுத்து செல்லப்படுவதாகவும், அரசு விதியை மீறி சுமார் 10 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அரசு அனுமதித்த பகுதியில் மணல் அள்ளாமல் அருகிலுள்ள கழனி பாக்கம் பாலாற்றில் மணல் அள்ளப்படுவதாக கழனிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தலைவரின் கணவர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் அமலாவின் கணவர் அண்ணாமலை ஆகியோர் தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் சென்று மணல் எடுத்து சென்ற டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் குவாரி நடத்தும் நிர்வாகிகள் மற்றும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கந்தனேரி பாலாற்றில் அரசு அனுமதி அளித்த எல்லையை தாண்டி மணல் அள்ளுகிறார்கள். அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலாக 10 அடிக்கு மேல் மணல் அள்ளுவதால் குடிநீர் மற்றும் விவசாய கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

எனவே அரசு அனுமதித்த இடத்தை தவிர மற்ற இடத்தில் மணல் அள்ளக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு அனுமதி வழங்கிய இடம் எவ்வளவு, நீளம், அகலம் எவ்வளவு என சுட்டிக்காட்டவேண்டும் என கூறினர். இதனையடுத்து அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, மண்டல துணை தாசில்தார் பழனி மற்றும் வருவாய்த் துறையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அரசு அனுமதி அளித்த இடம் எவ்வளவு என்று சுட்டிக்காட்டி கல் நட்டனர்.

அப்போது இதனை மீறி கழனிபக்கம் பாலாற்றில் மணல் எடுக்க மாட்டார்கள் என்று தாசில்தார் உறுதி அளித்ததின் பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக டிராக்டரில் இருந்து மணல் எடுத்துச் செல்வது தடைபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்