ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்
தா.பழூர் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் 450-க்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இனிவரும் காலங்களில் ரேஷன் கடையில் உரிய அளவில் சரியான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.