எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து திருச்சி, நெல்லையில் அ.தி.மு.க.வினர் போராட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து திருச்சி, நெல்லையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-03-14 08:09 GMT

நெல்லை,

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது அவருடன் பயணித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரன், தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார்.

அப்போது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், வீடியோ எடுத்தவரை தடுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையானது. இது சம்பந்தமான வீடியோவும் வலைத்தளங்களில் பரவிய நிலையில், ராஜேஸ்வரன் அவனியாபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

அதில், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், அவரது பாதுகாவலர் மற்றும் சிலர் தன்னை தாக்கியதுடன் செல்போனையும் பறித்துச் சென்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

ராஜேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் அரவிந்தன் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி தாக்குதல், செல்போன் பறிப்பு, காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே போல் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்