திண்டிவனம்-மரக்காணம் சாலை விரிவாக்கப்பணி:முத்து மாரியம்மன் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம்-மரக்காணம் சாலை விரிவாக்கப்பணிக்காக முத்து மாரியம்மன் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-27 18:45 GMT

திண்டிவனம், 

சாலை மறியல்

திண்டிவனம்-மரக்காணம் சாலை நான்கு வழி பாதையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மன்னார்சாமி கோவில் அருகே விரிவாக்கப்பணிக்கு இடையூறாக உள்ள முத்து மாரியம்மன் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8 மணியளவில் மன்னார்சாமி கோவில் பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும் கோவிலை கட்ட மாற்று இடம் கேட்டும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்டவரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கிராமப்புறங்களில் இருந்து பஸ்கள், வேன்களில் வந்த மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர். பெரும்பாலான மாணவர்கள் மறியல் நடந்த இடத்தில் இருந்து நடந்தே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

தாசில்தார் பேச்சுவார்த்தை

இதனிடையே மேற்கண்ட சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் தாசில்தார் அலெக்சாண்டர், திண்டிவனம், பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதியில் முத்து மாரி அம்மன் கோவில் உள்ளது. அதனை நிறுவ அதேபகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு தாசில்தார் ஹவுசிங்போர்டு பகுதியிலேயே புதிதாக முத்து மாரியம்மன் கோவில் கட்ட இடம் வழங்கப்படும் என்றார். இதனை ஏற்றுகொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரப்பு பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்