ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; 100-க்கும் மேற்பட்டோர் கைது

மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-02 09:56 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி தரக்கோரி ஆலை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்து மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சியினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு சிலரை மட்டுமே கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் மனு அளிக்க வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்